தினம் ஒரு பாசுரம் - 70
கூறாய் நீறாய் நிலனாகிக் கொடு வல் அசுரர் குலமெல்லாம்
சீறா எறியும் திருநேமி வலவா தெய்வக் கோமானே!
சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே.
--- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
பாசுரப் பொருள்:
கொடு வல் அசுரர் குலமெல்லாம் - கொடிய, வலிமை மிக்க அரக்கர்களின் கூட்டங்கள் அனைத்தும்கூறாய் நீறாய் - பல துண்டுகளாயும், பின் சாம்பலாயும்
நிலனாகிக் - பின் மண்ணில் (தேய்ந்து அழிந்து) போகும்படிச் செய்கின்ற
சீறா எறியும் - சீறி(யும்) அடங்காது பாய்கின்ற
திருநேமி வலவா - திருச்சக்கரத்தை வளைக்கையில் தரித்தவனே
தெய்வக் கோமானே! - கடவுளர்க்கெல்லாம் தலைவனே
சேறார் சுனைத் தாமரை - சேறு நிறைந்த குளங்களில் தாமரை மலர்கள்
செந்தீ மலரும் - நெருப்பைப் போல சிவப்பாகப் பூக்கின்ற
திருவேங்கடத்தானே! - திருமலையில் வாசம் செய்தருளும் எம்பெருமானே
ஆறா அன்பில் அடியேன் - (உன் மீது) மாறாத/குறையாத, அளவில்லாத அன்புடைய அடியவனான நான்
உன் அடி சேர் - உன் திருவடியை வந்து அடைவதற்கு
வண்ணம் அருளாயே - வழி காட்டி அருள் செய்ய வேணும்
பாசுரக்குறிப்புகள்:
திருமாலின் காத்தருளும், கருணை குணத்தைப் போற்றிப் பாடும் ஆழ்வார், அவனது (பகைவரை) அழிக்கும் தன்மையின் தீவிரத்தை சற்று உக்கிரமாகவேச் சொல்கிறார். இப்படியும் சிலபல உக்கிரப் பாசுரங்கள் உண்டு.இராமாயண போர்க்களத்தை ஆழ்வார் விவரிப்பதைப் பார்த்தால் சற்று அச்சம் ஏற்படும்!
மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன
நூறு பிணம் மலை போல் புரள கடல்
ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன்
நீறு பட இலங்கை செற்ற நேரே!
திருச்சக்கரத்தை ஒரு நவீன கால ஏவுகணைக்கு ஒப்பாகச் சொல்கிறார் ஆழ்வார். பரமனின் ஆழியானது, பகைவரை வெட்டிச் சாம்பலாக்கி மண்ணோடு மண்ணாக்கி விடும். சில நேரங்களில் காக்கும் தொழிலைச் செய்ய அழிக்கவும் வேண்டியிருக்கிறதல்லவா? செங்கோல் ஆட்சி புரிய திருச்சக்கரம் தேவையே .... என்று நம் ஆழ்வாரே திருவிருத்தத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.
"அருளார் திருச்சக்கரத்தால் அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெடச் செங்கோல் நடாவுதிர்"

"கன்னலே! அமுதே! கார்முகில் வண்ணனே! கடல் ஞாலம் காக்கின்ற மின்னு நேமியினாய்!"
என்று கடல் சூழ்ந்த உலகங்களை காத்து ஆள்வதில் மின்னும் திருச்சக்கரத்தின் பங்கை ஆழ்வார் எடுத்துரைக்கிறார்.
பெரிய திருவந்தாதியில்
"கார்க்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்
பார்க்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான்" என்று ஆழ்வார் அருள்கையில் சக்கரமானது பரமனின் வலக்கையை விட்டு அகல்வதே இல்லை என்று அர்த்தமாகிறது.
இங்கு திருச்சக்கரத்தை நம் தீவினைகளை வேரறுக்கும் தன்மைக்குக் குறியீடாகவும் கொள்ளலாம், அதற்கும் ஆழ்வார் பாசுரமே சான்று :-)
"எப்போதும் கைகழலா நேமியான் நம்மேல் வினை கடிவான்"
"சீறா எறியும்" - பகையை வேரோடு அழிக்கும் திருச்சக்கரமானது, ஓர் அழித்தலுக்குப் பின்னும், வன்மை சற்றும் குறையாமல், ஒளிர்ந்து கொண்டு அடுத்த ஏவுதலுக்குத் தயாராக இருக்கிறதாம்! அதுவே "சீறா எறியும்".
"திரு நேமி வலவா" - வலவன் = "வலக்கையில் உடையவன்", "திறமையாளன்".
"வல்லவன்" என்பது மருவி "வலவன்" ஆகியதாகக் கொண்டால் "அழிக்கும் தன்மை மிகுந்திருக்கும் திருவாழியை அடக்கியாள வல்லவனே" என்று ஆழ்வார் புகழ்வதாகக் கொள்ளலாம்.
"தெய்வக்கோமானே" --- சுவாமித்துவத்தின் வெளிப்பாடு. பெரும்பாலான திருவேங்கடமுடையான் பாசுரங்களில் சுவாமித்துவத்தை ஆழ்வார் போற்றியிருப்பதை நோக்குகையில், கலியுக அர்ச்சாவதார வழிபாட்டுக்கு மிக உகந்தவன் திருமலையில் வாசம் புரியும் பெருமாளே என்பதை ஆழ்வார் வாக்காகவே கொள்ளலாம்.
"சேறு ஆர் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!
ஆறா அன்பில் அடியேன் உன் அடி சேர் வண்ணம் அருளாயே"
"சேறார் சுனைத் தாமரை" க்கும் "ஆறா அன்பில் அடியேன்" என்பதற்கும் ஒரு நயமான தொடர்பை உருவாக்கலாம். "திருவேங்கடப் பெருமாளே! திருமலையில் உள்ள குளங்களில் நீர் வற்றலாம். ஆனால், உன் மீது எனக்குள்ள பேரன்பானது, என்றும் வற்றாது, மாறாக பெருகிக் கொண்டே இருக்கும் தன்மை உடையது. ஆகவே, என் சரணாகதியை ஏற்று உன் கமலத் திருவடி நிழலில் சேர்த்து, தொண்டு செய்ய அருள் புரிய வேணும்" என்று ஆழ்வார் இறைஞ்சுவதாகக் கொள்வதிலும் ஒரு சுவை இருக்கிறது தானே!
--- எ.அ. பாலா
0 மறுமொழிகள்:
Post a Comment